சிவபக்தன் அர்ஜுனன்
மஹாபாரதம் விளக்கும் தெளிவான ஒரு உண்மை நர நாராயணர்களே அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தனர் என்பது.
அர்ஜுனன் சிறந்த சிவ பக்தன். அர்ஜுனனின் வில்வித்தையைக் கண்டு மகிழ்வதற்காக வேடனாக வந்த சிவன் பன்றியின் பின் பக்கமாக அம்பு எய்ய அர்ஜுனன் அது செல்லாது என்கிறான். ஆனால் தர்ம சாஸ்திரப்படி அது செல்லும் என்று கூறிய சிவன் அர்ஜுனனைப் பலவிதமாக திக்குமுக்காடச் செய்து அவன் வில்வித்தையைக் கண்டு மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் வில்லைத் தூக்கி எறிந்த பார்த்தன் மல்யுத்தம் செய்ய முன்வர சிவன் மகிழ்ச்சியோடு அவனை எதிர் கொள்கிறார். யுத்தத்தின் ஒரு அங்கமாக சிவனின் காலை அர்ஜுனன் மடக்கிப் பிடிக்கவே தன் காலில் விழுந்த பக்தனுக்கு அனுக்கிரஹம் செய்வதையே கடமையாகக் கொண்ட சிவன் தன் சுய உருவத்தைக் காண்பித்து அவனை ஆசீர்வதிக்கிறார். பிரமித்து நிற்கும் அர்ஜுனன் தனது பெரும் பேறை எண்ணி மகிழ்கிறான். (இன்னொரு கூற்றின் படி வேடனைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் அர்ஜுனன் சிவலிங்கத்தைத் தொழ கேட்டதை அனுக்ரஹிக்கும் சிவன் வேட உருவத்தை மாற்றி சிவனாக அவன் முன் தோன்றி ஆசீர்வதிக்கிறார்)
அர்ஜுனனின் சபதமும் கவலையும்
இப்படிப்பட்ட மாபெரும் சிவ பக்தன் ஒரு நாள் பெரும் சோதனைக்கு ஆட்பட்டுக் கவலையில் ஆழ்ந்தான். அபிமன்யுவின் அநியாயமான மரணத்திற்கு சிந்து தேச அரசனான ஜயத்ரதனே காரணம் என்பதை அறிந்து பெரும் கோபம் அடைந்த அர்ஜுனன் மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்வதாக சபதம் பூணுகிறான். அன்று இரவு தான் அவனுக்குப் பெரும் கவலை ஏற்பட்டது. தனது சபதத்தை அறிந்த கௌரவ சேனை முழுவதும் மறுநாள் ஜயத்ரதனைக் காக்க வருமே, இந்த சோதனையிலிருந்து எப்படி மீள்வது என்று சிந்தித்தவாறே உறக்கத்தில் ஆழ்ந்தான்.
கனவில் நடந்த அதிசயப் பயணம்
அப்போது அவனுக்கு கனவு ஒன்று தோன்றுகிறது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம் வந்து கவலைக்குக் காரணம் என்ன என்கிறார். மறுநாள் ஜயத்ரதனைக் கொல்வது சாத்தியமா என்கிறான் அர்ஜுனன்.
உடனே கிருஷ்ணர் அர்ஜுனனை அழைத்துக் கொண்டு கைலாயம் செல்கிறார். இருவரையும் கண்ட சிவன் வந்த விஷயம் என்ன என்று கனிவுடன் கேட்கிறார்.
கிருஷ்ணரும் அர்ஜுனனும் அவரைத் துதித்து மறுநாள் நடக்கவிருக்கும் போருக்காக பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதோடு அதன் பிரயோகத்தையும் அறிவதற்காக வந்துள்ளதாகவும் சிவன் அனுக்ரஹம் புரியவேண்டுமெனத் துதிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

உடனே சிவ பெருமான் அருகில் உள்ள தடாகத்தில் உள்ள வில்லையும் அம்பையும் எடுத்து வருமாறு பணிக்கிறார். அருகே உள்ள தடாகத்திற்கு கிருஷ்ணார்ஜுனர்கள் சென்ற போது அங்கே பயங்கரமான இரு ஸர்[ப்பங்களை தடாகத்தில் பார்க்கின்றனர். அர்ஜுனன் சதருத்ரியம் என்னும் வேத மந்திரத்தால் துதிக்க அந்தப் பாம்புகள் இரண்டும் ஒன்று வில்லாகவும் இன்னொன்று அம்பாகவும் மாறவே வியப்படைந்து அவை இரண்டையும் எடுத்துக் கொண்டு சிவபிரானிடம் வருகிறான்.
அந்த வில்லையும் அம்பையும் சிவபிரான் பெற்றவுடன் அங்கு ஒரு பிரம்மச்சாரி எழுகிறான். அவன் வில்லிலே அம்பைப் பூட்டிக் காண்பிக்க அர்ஜுனன் அந்த நிலையை நன்கு கற்றுக் கொண்டு ருத்ரன் கொடுத்த மந்திரத்தையும் பெற்றுக் கொள்கிறான்.
இப்படியாக, சிவன் பாசுபாதாஸ்திரத்தை அர்ஜுனனிடம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.. கனவிலேயே நடக்கும் இந்த அதிசயப் பயணமும் பாசுபதாஸ்திரத்தைப் பெறும் நிகழ்ச்சியும் மஹாபாரதம் துரோண பர்வத்தில் வேத வியாஸரால் விவரிக்கப்படுகிறது. படிப்போரைப் புல்லரிக்க வைக்கும் அதிசய நிகழ்வு இது! (துரோண பர்வத்தில் 80, 81 அத்தியாயங்களிலும் 147,148ஆம் அத்தியாயங்களிலும் விவரிக்கப்படுகிறது – 1922ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ம.வீ.ராமானுஜாசாரியார் பதிப்பு).கனவில் இப்படியொரு அற்புத அஸ்திரம் பெறும் நிகழ்வைச் சுட்டிக் காட்டும் ஒரே இலக்கியம் மஹாபாரதமே!
பாசுபதாஸ்திரம்
பாசுபதாஸ்திரம் சாதாரணமாக மனிதர்கள் மேல் பிரயோகிக்கப்படக் கூடாத தெய்வீக அஸ்திரம். மனம் பரிசுத்தமான, பாவமற்ற ஒருவனே அதைப் பெற முடியும். சிவன் அர்ஜுனனை மனிதர்களிலேயே உத்தமமான ஒருவனாக அங்கீகரித்து அதை உலகிற்குக் காட்டிய சம்பவம் இது. கிருஷ்ணரும் அர்ஜுனனை கீதையில் ‘பாவமற்றவனே’ என அழைப்பதையும் காணலாம்.
மந்திரம் கூறி வெறும் கண்களினால் எய்யப்படும் ஆச்சரியமான பாசுபதாஸ்திரத்தை ஜயத்ரதன் மீது கிருஷ்ணரின் ஆணையால் அர்ஜுனன் பதினான்காம் நாள் நடந்த போரில் பிரயோகிக்க அவன் தலை அறுந்து ஆகாயத்தில் பறக்கிறது.
உடனே கிருஷ்ணர், ‘”அர்ஜுனா! அதைக் கீழே விழ விடாதே. அவனது தகப்பன் விருத்தக்ஷத்திரன் அந்தத் தலை யார் மீது விழுகிறதோ அவன் தலை சுக்கு நூறாக வெடிக்க வரம் வாங்கியுள்ளான். இப்போது தவத்தில் ஆழ்ந்துள்ள அவன் மீது தலையை விழச் செய்” என்று கட்டளை இடுகிறான்.
அர்ஜுனன் தலையை ஆகாயத்தில் பந்தாடிச் சுழலவிட்டு அதை விருத்தக்ஷத்திரன் மடியில் விழச் செய்யவே அவன் தலை சுக்கு நூறாக வெடிக்கிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! சிவ, கிருஷ்ணரின் அனுக்ரஹம் சேர்ந்து இருக்கும் போது அர்ஜுனனால் எதைத் தான் சாதிக்க முடியாது!
மகாபாரதம் விவரிக்கும் அற்புதமான சிவானுக்ரஹத்தை கதை நெடுகிலும் ஆங்காங்கே காணலாம். சிவ பக்தியின் மஹிமையையும் பயனையும் உணர்ந்து மெய் சிலிர்க்கலாம்.
சிவன் வழி நடத்திச் சென்ற மஹாபாரதப் போர்
இன்னொரு மாபெரும் ரகசியத்தையும் துரோண பர்வத்தின் இறுதி அத்தியாயத்தில் (263ஆம் அத்தியாயம்) காணலாம்.துரோண வதம் முடிகிறது. அர்ஜுனன் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்த மஹரிஷி வியாஸரிடம், “மஹரிஷியே! பகைவர்களைக் கொன்றேன். ஆனால் எனது முன்னால் அக்னி போன்று பிரகாசிக்கும் ஒரு மஹாபுருஷர் சென்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவர் சென்ற வழியே நான் செல்கிறேன். அவர் செல்லும் வழியெல்லாம் பகைவர் அழிகின்றனர். எல்லோரும் நான் தான் பகைவரைக் கொன்று கொண்டிருப்பதாக எண்ணுகின்றனர். அவர் யார்?” என்று விளங்காத மர்மத்தைத் தெரிந்து கொள்ளூம் ஆவலில் கேட்கிறான்.
மஹரிஷி வியாஸர்,” அவரே சங்கரர். பக்தர்களுக்கு அழியாத வரம் கொடுத்து அனுக்ரஹிக்கும் மகாதேவனைச் சரண் அடை” என்று அருளுகிறார்.
மஹாபாரதப் போரில் அர்ஜுனனைக் கருவியாகக் கொண்டு சிவனே யுத்தத்தை முன் நின்று நடத்திய மாபெரும் அதிசயச் செய்தியை அர்ஜுனன் மற்றும் வியாஸ முனிவரின் வார்த்தைகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.

சிவ ரகசியம்:சத ருத்ரியம்
சிவனின் மஹிமைகளை வியாஸர் அர்ஜுனனுக்குத் தெளிவாக விவரிக்கையில் பல ரகசியங்கள் நமக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றன. அவற்றில் முக்கியமான சில:-
1)ஆயிரம் வருட காலம் இடைவிடாமல் சொன்னாலும் சிவனின் குணங்களின் பெருமையை என்னால் சொல்ல முடியாது – வியாஸர்
2)பக்தர்களை அவரே எல்லா இடுக்கண்களிலிருந்தும் விடுவிக்கிறார். நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், ஐஸ்வர்யமும், தனமும்,புஷ்களமான அபீஷ்டங்களையும் அவரே பக்தர்களுக்கு அனுக்ரஹிக்கிறார்.
3)அபீஷ்டங்களுக்கு பிரபு ஆதலின் அவர் ஈஸ்வரர் (எனப்படுகிறார்).மஹா பூதங்களுக்கு ஈஸ்வரராக இருப்பதால் அவர் மஹேஸ்வரர்.
4)பிரம்மா, வருணன், இந்திரன், யமன், குபேரன் இவர்களைத் தண்டித்து சம்ஹரித்தலால் அவர் ஹரன். பலாத்காரமாக இரண்டு கண்களும் மூடப்பட்டபோது மூன்றாவதாக ஒரு கண்ணை உருவாக்கிக் கொண்டதால் அவர் முக்கண்ணர்.

5) அவரது மங்களரூபமானது தொடைகள் வரை அக்னி மயமானது. மறு பாதி சந்திரமயமானது. யார் ஒருவர் அவரைத் தொழுகிறாரோ அவர் சகல ஐஸ்வர்ங்களையும் பெறுகிறார்.
இப்படி சத ருத்ரியமாக சிவனின் பெருமைகளை வேத வியாஸர் விவரிப்பது பிரமிக்க வைக்கும் பெரும் வேத ரகசிய விளக்கமாகத் திகழ்கிறது.
சிவன், சக்தி, விநாயகர், முருகன் விஷ்ணு என அனைவரின் மஹிமைகளையும் விளக்கும் அபூர்வமான இலக்கியமான மஹாபாரதம் உலகின் தலையாய அற நூல். இதைப் பரப்புவதன் மூலம் அறத்தை தலை நிறுத்தி பாரதத்தை உலகின் உன்னத ஸ்தானத்தில் ஏற்ற முடியும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!
மாங்காடு B மணிவண்ணன்,