* எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.
* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், செய்யும் செயல் அனைத்திலும் நேர்த்தியும், ஒழுங்கும் உண்டாகும்.
* நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.
* தனக்காக மட்டும் மனிதன் வாழ்வது கூடாது. இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.
* தானத்தில் சிறந்தது அன்னதானமே. இதில் மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.
காஞ்சிப்பெரியவர்
நியாய வழி நடப்போம்
* எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.
* ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.
* மனதில் கட்டுப்பாடு இருக்குமானால், நியாயவழி நடப்பதில் சிரமம் ஏதும் இருக்காது.
* நல்ல மனிதர்களிடம் நட்பு வைத்துக் கொண்டால், நல்வழியில் நடக்க துாண்டுகோலாக இருக்கும்.
* ஆசையும், வெறுப்பும் இல்லாமல் செய்யும் எந்த செயலும் நன்மையானதாகவே இருக்கும்.
- காஞ்சிப்பெரியவர்
கடவுளுக்கு நன்றி
* கடவுளைப் பூஜிப்பதால் மனம் சுத்தம் அடைவதோடு, புண்ணியமும் உண்டாகிறது. பூஜை மட்டுமில்லாமல், சாப்பிடும் போது மனதிற்குள், 'கருணையால் எனக்கு அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என்று சிந்திப்பது இன்னும் நல்லது.
* உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* பக்தியோடு உண்பதால் மனதில் நல்லெண்ணம் உண்டாகும். இந்த பழக்கம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.
-காஞ்சிப்பெரியவர்
* சுயதேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதில் கவுரவக்குறைவு இல்லை. அற்காக பிறரை எதிர்பார்ப்பது தான் கவுரவமின்மை.
* மனிதன் முதலில் தன் குடும்பத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். அதன்பின், ஊராருக்குத் தொண்டு செய்ய விரும்பலாம்.
* எல்லாரிடமும் சமமான அன்பு, இனிமையாகப் பழகுதல் போன்றவையே தொண்டு செய்வோருக்கு தேவையான அடிப்படை குணங்கள்.
* சமூகசேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.
-காஞ்சிப் பெரியவர்
நேர்மையுடன் செயல்படு!
* நேர்மையுடன் எந்த செயலைச் செய்தாலும், அதில் ஆர்வமும், விருப்பமும் உண்டாகும்.
* உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே ஏற்படும்.
* வெளியுலகில் பெறும் இன்பம் தற்காலிகமானது. மனதைப் பக்தியில் செலுத்துவதால் வரும் இன்பம் நிரந்தரமானது.
* மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை 'கர்ம கோட்பாடு' என கூறுகிறது.
காஞ்சிப்பெரியவர்
பேச்சில் கவனம் தேவை
* பணத்தில் மட்டுமில்லாமல், பேசும் போது பயன்படுத்தும் சொல்லிலும் கூட அளவாக இருப்பதே நல்லது.
* அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.
* எதைப் பாதுகாக்காவிட்டாலும், நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருவள்ளுவர் குறளில் கூறியுள்ளார்.
* 'கொட்டி விடலாம்; ஆனால், அள்ள முடியாது' என பாமரரும் பேச்சால் வரும் கேடு பற்றிச் சொல்வதுண்டு.
* 'மவுனம் கலக நாஸ்தி' என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.
- காஞ்சிப்பெரியவர்
பக்தியே பண்படுத்தும்
* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.
* அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.
*ஒழுக்கமும், நேர்மையும் மனதில் இருந்தால் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும்.
* கடவுள் இரண்டு கைகளைக் கொடுத்ததன் நோக்கம், நம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே.
* மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.
- காஞ்சிப்பெரியவர்
மனதைப் பாதுகாப்போம்
* இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.
* எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம்.
* கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்தால் கொடிய பாவமும் நீங்கி விடும்.
* ஒழுக்கமுடன் வாழ்பவர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் ஒழுங்கும், நேர்த்தியும் நிறைந்திருக்கும்.
* நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.
காஞ்சிப்பெரியவர் நேரத்தை வீணாக்காதீர்
* வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.
* பிறருக்குச் செய்வது மட்டுமில்லாமல், குடும்ப நன்மைக்காகப் மனிதன் பாடுபடுவதும் ஒருவித சேவையே.
* சுயநலத்துடன் வாழாமல் பிறருடைய துன்பம் தீர்க்க முயல்பவனுக்கே கடவுளின் அருள் கிடைக்கும்.
* மனித வாழ்வில் அடையும் பாக்கியங்களில் சிறந்தது, பிறருக்கு சேவை செய்து வாழ்வது ஒன்றே.
* நிறைவேறாத ஆசைகளே, கோபம், வருத்தம் என்னும் இரு நிலையில் பேச்சில் வெளிப்படுகிறது.
-காஞ்சிப்பெரியவர்
நட்பால் வெல்லுங்கள்
* எல்லார் இதயங்களையும் நட்பால் வெல்லுங்கள். பிறரையும் தன்னைப் போல் நோக்குங்கள்.
* சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.
* நம் தாயாகிய பூமி, நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்.
* நம் தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே, அவரை வணங்குங்கள்.
-காஞ்சிப்பெரியவர்